Posted in கவிதைகள், தெருக்குறள் on 01/30/2009 08:00 am by Ravi Chellathuray
நாடு விட்டு நாடுமாறி நான் இங்கு ஓடிவந்தேன்
அகதியென்று சொல்லிச்சொல்லி நான் இங்கு வாழ்ந்திருந்தேன்
அகதிப்பணம் எடுத்து அதில் அளவாய் வாழ்ந்திருந்தேன்
வேலை பல தேடி தினம் தினமே அலைந்திருந்தேன்
முடிவினிலே எனக்குதவா வேலையொன்று நான் பெற்றேன்
விருப்பமற்ற வேலையை நான் வெறுப்புடனே செய்துவந்தேன்
பணம் கையில் சேர்ந்ததனால் அவ்வெறுப்பை நான் மறந்தேன்
வருடம் பல போனதனால் பெரும்தொகையும் சேர்த்துவிட்டேன்
அத்தொகையில் ஒருபகுதி வட்டிக்கு விட்டிருந்தேன்
வட்டிப் பணம் எடுத்து சீட்டும் பிடித்திருந்தேன்
காரோடும் கைரேலிபோனோடும் பலநாடு பார்த்துவந்தேன்
விழாக்கள் பல செய்திருந்தேன் விழாக்களுக்கும் சென்றுவந்தேன்
மொய் பலவும் கொடுத்துவிட்டேன் மொய் பலவும் வாங்கிவிட்டேன்
அகதி வாழ்வினிலே அலங்கார வாழ்க்கை வாழ்ந்தேன்
அலங்கார வாழ்க்கையினால் என்நாட்டு நிலை மறந்தேன்
இந்நிலமை வந்ததனால் என் நாட்டு நிலைமறந்தேன்
பகட்டாக வாழ்ந்ததனால் என் இனத்தை நான் வெறுத்தேன்
இப்படி வாழ்கையிலே இடிவிழுந்த செய்தி கேட்டேன்
வட்டிக்கு வாங்கியவனோ போடர் தாண்டி பாய்ந்து விட்டான்.
சீட்டை எடுத்தவனோ சுத்திக்கொண்டு ஓடிவிட்டான்
இந்நிலமை வந்ததனால் கதிகலங்கிப் போய்விட்டேன்
பணமிழந்து இனமிழந்து ஆப்பிழுத்த குரங்கானேன்
புலம் பெயர் மண்ணிலே புலம்பித் திரிகின்றேன்
புலம்பலை நான் இன்று கவிதையாய் வடிக்கின்றேன்
இனமின்றி, மொழியின்றி நடைபிணமாய் திரிகின்றேன்
நம்மவர்கள் பலருக்கு நான் ஒரு பாடமானேன்
அலங்கார வாழ்க்கையிலே அவலக் கோலமானேன்
Posted in சிரித்து சிந்தியுங்கள் on 01/23/2009 09:50 am by Ravi Chellathuray
கந்தப்பு: ஐரோப்பாவுக்கு வந்து எங்கட தமிழர்கள் வெள்ளையன்களையும் எங்கட கலாச்சாரத்துக்கு மாத்தி போட்டினம்
சோமண்ணை : எதை வைத்து அப்படி சொல்லுறியள்?
கந்தப்பு: விழாக்களில் பூ குடுத்த வெள்ளையன்கள் இப்ப எங்களைப்போல் மொய் குடுக்க துவங்கீட்டினம் கண்டியே !
Posted in கவிதைகள் on 01/16/2009 08:00 am by Ravi Chellathuray
சோசல் காசில் எந்நாளும் இருக்க வேண்டாம்
இரண்டு வேலை பலகாலம் செய்ய வேண்டாம்
ஓடி ஓடி பலநாடு மாற வேண்டாம்
போகவிட்டு நக்கல் கதை கதைக்க வேண்டாம்
குசும்பர் கூட்டம் கூடும் இடம் போக வேண்டாம்
மொய் எடுப்பார் விழா எடுத்தால் கொடுக்கவேண்டாம்
பகட்டு கதை கதைப்பாரோடு பழக வேண்டாம்
சேல்ஸ் இல்லா கடைதனிலே வாங்க வேண்டாம்
இருக்கும் போதும் இல்லை என்று சொல்ல வேண்டாம்
லொக்கரிலே நகைதனை வைக்க வேண்டாம்
பொன்சரிலே பெற்றவரை அழைக்க வேண்டாம்
நாடு மாறி வேறு இடம் அனுப்ப வேண்டாம்
அன்னதானம் இல்லா கோவில் போக வேண்டாம்
காட் எடுத்து தொலைக்காட்சி பார்க்க வேண்டாம்
பார்க்காததை பார்த்தது போல் கதைக்க வேண்டாம்
கடன்பட்டு கடன்பட்டு வாழ வேண்டாம்
உறவோடு உறவாடி திரிய வேண்டாம்
சண்டையிட்ட பின்னாலே பிரிய வேண்டாம்
தன் விலாசமில்ல கடிதங்கள் அனுப்ப வேண்டாம்
கை எழுத்து இல்லாத தபால்தனை அனுப்ப வேண்டாம்
ரெலி போனில் குரல் மாற்றி பேச வேண்டாம்
மொட்டைக் கடிதம் அனுப்பி அனுப்பி அலைய வேண்டாம்
குரூப் குரூப்பாய் கோஷ்டி பல அமைக்க வேண்டாம்
நல்ல வற்றை குழப்பி குழப்பி நிறுத்த வேண்டாம்
சொன்னவற்றை சொல்ல வில்லை என்ன வேண்டாம்
நம்பாமல் நடப்பவரை நம்பி நடக்க வேண்டாம்
வதந்தியை செய்தியாக்கி சொல்ல வேண்டாம்
தமிழோடு பிற மொழியை கலக்க வேண்டாம்
பொது நலத்தை சுய நலமாய் மாற்ற வேண்டாம்
படிக்காமல் படித்தவன் போல் நடிக்க வேண்டாம்
கழிவோடு சீட்டதனை எடுக்க வேண்டாம்
வட்டிகட்டி வட்டிகட்டி வாழ வேண்டாம்
அகதி என்ற நிலமை தனை மாற்ற வேண்டாம்
வேண்டாம் வேண்டாம் வேண்டாததை விரும்ப வேண்டாம்
Posted in கவிதைகள் on 01/09/2009 09:45 am by Ravi Chellathuray
தாரத்தை கண்டபின்பு தாயை மறந்துவிட்டோம்
தொழில் ஒன்றை பெற்றபின்பு தந்தையை மறந்துவிட்டோம்
வித்தைகளை கற்றபின்பு குருவை மறந்துவிட்டோம்
நன்மைகளை பெற்றபின்பு நட்பையும் மறந்துவிட்டோம்
பிறமொழியை கற்றபின்பு தாய்மொழியை மறந்துவிட்டோம்
பகட்டாக வாழ்வதனால் பக்தியினை மறந்துவிட்டோம்
சுயநலமாய் வாழ்வதனால் பொதுநலத்தை மறந்துவிட்டோம்
காலைமாலை வேலைசெய்து உடல்நலத்தை மறந்துவிட்டோம்
தொலைக்காட்சி பார்பதனால் வானொலியை மறந்துவிட்டோம்
ரொக்கங்கள் கேட்டதனால் ஊடகத்தை மறந்துவிட்டோம்
கணணிகள் வந்தபின்பு சஞ்சிகையை மறந்துவிட்டோம்
வாகனப் பயணத்தால் கால்பயணம் மறந்துவிட்டோம்
புலம்பெயரந்து வாழ்வதனால் எம் உறவை மறந்துவிட்டோம்
தாய்மண்ணை மறந்ததனால் எம்நிலமை மறந்துவிட்டோம்
அவலத்து வாழ்கையிலே அத்தனையும் மறந்துவிட்டோம்
மறந்துவிட்டோம் மறந்துவிட்டோம் எல்லாமே மறந்துவிட்டோம்
Posted in சிரித்து சிந்தியுங்கள் on 01/02/2009 08:00 am by Ravi Chellathuray
கந்தப்பு:காலையில் இருந்து போன் பன்னுகிறன் லைன்
கிடைக்கு தில்லையெண்டு எங்கட சுந்தரம் படு
கவலையாய் இருக்கிறான்.
சோமண்ணை: கன காலமாக வன்னியில் இருக்கிற தன்ற
குடும்பத்தின்ற குரலை கூட கேட்க்க முடியாட்டி கவலை
யாத்தானே இருக்கும்!
கந்தப்பு: அவன் அதுக்கே கவலைப்பட்டவன்!
சோமண்ணை: அப்ப எதுக்காம்?
கந்தப்பு: ஐரோப்பிய வானொலியில் நீங்களும் பாடலாம்
நிகழ்ச்சிக்கு லைன் கிடைக்குதில்லையாம்.
சோமண்ணை: !?!?!?